திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.136 திருத்தருமபுரம்
பண் - யாழ்முரி
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
    நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
    அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
    இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
    எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
1
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
    பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
    வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
    தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
    றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
2
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
    டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றெhளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
    கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
    வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
    கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.
3
வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
    வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
    கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
    படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
    தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
4
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
    கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
    பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
    வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
    கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
5
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
    குமென் முலைப் பொறி கொள்கொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
    வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மௌ;கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
    துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
    புள்ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
6
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
    திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
    தொல் புனல் சிரங்கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
    கடல் அடைகழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
    வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
7
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
    குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
    கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
    கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
    கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
8
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
    வளங் கிளர்மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
    குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரையும்
    மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
    தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
9
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
    மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
    நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
    புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்துரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
    தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
10
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
    பொரு புனல் திருவமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃது
    செந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
    யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
    உறுவர்க ளிடர் பிணி துயரணை விலரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com